லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுமி உள்பட 4 பேர் கைது
ராமநத்தம் அருகே லாரி டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுமி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்,
திருவண்ணாமலை அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 46). டிரைவர். இவர் கடந்த 6-ந்தேதி செங்கம் பகுதியில் இருந்து லாரியில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு திருவாரூருக்கு சென்றார். செங்கல்களை அங்கு இறக்கி வைத்துவிட்டு, அதற்கான தொகை ரூ.93 ஆயிரத்தை அண்ணாமலை பெற்றுக்கொண்டு, திருவண்ணாமலை நோக்கி லாரியை ஓட்டி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ராமநத்தம் அடுத்த திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லெக்கூர் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் லாரியை நிறுத்துமாறு கூறி கைகாட்டினார். உடன் அண்ணாமலையும் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.
அப்போது திடீரென வந்த 3 பேர் அண்ணாமலையின் கழுத்தில் கைத்தியை வைத்து, அவரிடம் இருந்த ரூ.93 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அண்ணாமலை ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வந்தனர்.
4 பேர் சிக்கினர்
நேற்று ராமநத்தத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய் கீர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 16 வயது சிறுமி உள்பட 4 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடன் போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், ராமநத்தம் அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்த நல்லமுத்து மகன் இளையராஜா (வயது 35), அரசன் மகன் ஆதேஷ் (27), கோழியூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கண்ணதாசன் மகன் பூமிநாதன் (27) மற்றும் திட்டக்குடியை சேர்ந்த 16 வயது சிறுமி என்பது தெரியவந்தது.
பணம் பறிமுதல்
மேலும் சிறுமி மூலம் லாரியை நிறுத்தி அண்ணாமலையிடம் இருந்த பணத்தை இவர்கள் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.26 ஆயிரம், மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதானவரிகளில் 3 வாலிபர்களை கடலூர் மத்திய சிறையிலும், சிறுமியை கடலூரில் உள்ள காப்பகத்திலும் போலீசார் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.