நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மீனவர் சங்க நிர்வாகிகள் முற்றுகை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மீனவர் சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை மீனவர் சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.
மீன்வள மசோதா
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவை எதிர்த்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மேலும், நெல்லை மாவட்ட அனைத்து மீனவர் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் கூத்தங்குழி தலைவர் இன்னாச்சி, கூட்டப்பனை தலைவர் ஆம்ஸ்ட்ராங், உவரி தலைவர் ஜார்ஜ், கூடுதாழை துணைத்தலைவர் ரவி, இடிந்தகரை அந்தோணி உள்ளிட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தேசிய மீன்வள மசோதாவை கைவிட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர். ஆனால் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இடிந்தகரை ஊர்நலக்கமிட்டி சார்பிலும் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.