கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் தத்தளித்த வாலிபர். ஏற்கனவே இறந்த வாலிபர் கூச்சலிடுவதாக பயந்து ஓடிய இளைஞர்கள்.

குடியாத்தம் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் ஒருவர் இரவு முழுவதும் தத்தளித்துள்ளார். ஏற்கனவே இறந்த வாலிபர் கூச்சலிடுவதாக நினைத்து இளைஞர்கள் பயந்து ஓடினர்.

Update: 2021-08-09 18:17 GMT
குடியாத்தம்
கிணற்றில் விழுந்த வாலிபர்

குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார்மலை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி அதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். 

சாமியார்மலை அருகே உள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவரது மகன் ஸ்ரீதர் (30). குடியாத்தம் செதுக்கரை பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் செல்போனில் பேசியபடி அந்த கிணற்றின் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 
பயந்து ஓடிய இளைஞர்கள்

25 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளதால் நீச்சல் தெரிந்த ஸ்ரீதர் சிறிது நேரம் தண்ணீரில் நீந்தியபடி  காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும் காப்பாற்ற வரவில்லை. இதனால் அவர் தனது சட்டையை கழட்டி ஒரு கல்லில் கட்டி, அதைப்பிடித்துக்கொண்டு மீண்டும் கூச்சலிட்டு உள்ளார். அப்போது சற்றுத் தொலைவில் மோர்தானா கால்வாய் கரை மீது அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் கிணற்றில் இருந்து சத்தம் வருவதை கேட்டு கடந்த மாதம் கிணற்றில் விழுந்து இறந்த ஆகாஷின் குரல் என பயந்து வீட்டுக்கு சென்று விட்டனர்.
 
இரவு முழுவதும் ஸ்ரீதர் கூச்சலிட்டபடி இருந்துள்ளார். நேற்று காலையில் ஆகாஷ்தான் ஆவியாக வந்து கூச்சலிடுகிறான் என அக்கம்பக்கத்தினர் பேசிக் கொள்ளவே, தனது மகனின் குரலையாவது கேட்போம் என ஆகாஷின் தந்தை ஜானகிராமன் கிணற்றுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் ஸ்ரீதர் தத்தளித்துக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. 

12 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

உடனே ஸ்ரீதரை கயிறுகட்டி மீட்டனர். சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு ஸ்ரீதர் மீட்கப்பட்டார். 
இந்த கிணற்றை உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த கிணற்றை ஒட்டியபடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  உயர்நிலைப்பள்ளி உள்ளது. எனவே பள்ளி திறந்தவுடன் மாணவர்கள் இந்த கிணற்றின் பக்கம் சென்று விளையாட வாய்ப்பு உள்ளது. அப்போது மாணவர்கள் அதில் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் உடனடியாக இந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்