கோவில் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், டி.மணியட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம், டி.மணியட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோரிக்கை மனுக்கள்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர். அதனை அதிகாரிகள் எடுத்து, பரிசீலனைக்கு பிறகு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க கலெக்டர் அனுமதியுடன் அனுப்பி வைக்கின்றனர். அதன்படி நேற்று ஊட்டி அருகே உள்ள டி.மணியட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு
எங்கள் கிராமத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த நஞ்சுண்டையா சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் இருக்கிறது.
அதில் பக்தர்களுக்கு உணவு வழங்கும் கட்டிடம், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிலர் அந்த நிலத்தை ஆக்கிரமித்து, விவசாயம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மகளிர் சுய உதவிக்குழு கடன்
இதேபோன்று எமரால்டு அருகே தக்கர்பாபா நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஏற்கனவே வழங்கப்பட்ட கடன் தொகையை மஞ்சூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு முறையாக திருப்பி செலுத்தி உள்ளனர். தற்போது மீண்டும் கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளோம். ஆனால் கடன் தர மறுக்கின்றனர். எனவே கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.