காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம்
கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார். மேலும் கோவில், மளிகை கடைகள் சேதப்படுத்தியது.
கூடலூர்,
கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம் அடைந்தார். மேலும் கோவில், மளிகை கடைகள் சேதப்படுத்தியது.
காட்டுயானை முற்றுகை
கூடலூர் தாலுகாவில் காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பாடந்தொரை அருகே தயிர்மட்டம் பகுதியில் காட்டுயானை புகுந்தது. பின்னர் அங்குள்ள பரதேவதை கோவிலை முற்றுகையிட்டது. தொடர்ந்து கதவை உடைத்து, பூஜை பொருட்களை துதிக்கையால் தூக்கி வீசி அட்டகாசம் செய்தது. பின்னர் நேற்று அதிகாலையில் வனப்பகுதிக்குள் அந்த காட்டுயானை சென்றது.
வாலிபர் படுகாயம்
இது தவிர பாடந்தொரையை சேர்ந்த சிவபிரகாஷ்(வயது 30) என்பவர் மண்வயல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். மாரக்கரை என்ற இடத்தில் புதர் மறைவில் இருந்து திடீரென காட்டுயானை வெளியே வந்தது. பின்னர் சிவப்பிரகாசை துதிக்கையால் தாக்கி தூக்கி வீசியது.
இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த மக்கள் காட்டுயானையை விரட்டினர். பின்னர் சிவப்பிரகாசை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மளிகைக்கடைகள்
இதற்கிடையில் கூடலூர் அருகே தேவாலா அட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் பாபு, ஜீவ கண்ணன் ஆகியோரது மளிகைக்கடை ஷட்டரை உடைத்து சேதப்படுத்தின. மேலும் அங்கு இருந்த உணவு பொருட்களை தின்றது. பின்னர் நேற்று அதிகாலையில் காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது காட்டுயானைகள் தொல்லையால் நிம்மதியை இழந்து உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும், சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.