பார்த்தீனியம் செடிகளால் பசுந்தீவன தட்டுப்பாடு அபாயம்
முதுமலை வனப்பகுதியில் பார்த்தீனியம் செடிகளால் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கூடலூர்,
முதுமலை வனப்பகுதியில் பார்த்தீனியம் செடிகளால் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
பார்த்தீனியம் செடிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. எனினும் வனவிலங்குகளின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. மேலும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இது தவிர உன்னி செடிகளும் படர்ந்து வளர்கிறது. இதனால் பசுந்தீவன பற்றாக்குறையால் காட்டுயானைகள் இடம்பெயர்ந்து, விவசாய பயிர்களை தேடி கூடலூர், தேவாலா, நெலாக்கோட்டை, பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து வருகிறது. இதன் மூலம் மனித-வனவிலங்கு மோதல் நிகழ்கிறது.
சுவாச பிரச்சினை
இதன் காரணமாக முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமித்து உள்ள பார்த்தீனியம் செடிகளை அடியோடு அகற்ற வனத்துறையினர் தொலைநோக்கு திட்டத்தை வகுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:- மண்ணின் வளத்தை பார்த்தீனியம் செடிகள் அழிக்கிறது. இவை வளரும் இடத்தில் வனவிலங்குகளுக்கு தீவனமாகும் புற்கள் உள்ளிட்ட தாவர இனங்கள் வளர வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு மண்ணை விஷத்தன்மையுடன் மாற்றக்கூடியது.
இதன் மூலம் வனவிலங்குகளுக்கு மட்டும் இன்றி மனிதர்களுக்கும் இதய கோளாறு மற்றும் சுவாச பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த செடிகள் பூப்பதற்கு முன்பு வெட்டி அகற்றி தீ வைத்து எரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் பூக்கள் பூத்ததும், காற்றில் பல இடங்களுக்கும் விதைகள் பரவி விடும்.
தொலைநோக்கு திட்டம்
இது மட்டுமின்றி முதுமலை வனப்பகுதியில் உன்னி செடிகளும் பரவலாக காணப்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு போதிய பசுந்தீவனம் கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே அவை ஊருக்குள் வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் சம்பவம் குறையும். இதை தடுக்க தொலைநோக்கு திட்டத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் வகுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.