வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.;
தர்மபுரி:
மயான இடவசதி
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர். அவர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போட்டனர்.
ஏரியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், ஏரியூர் இந்திரா நகர், அண்ணா நகர் பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு மயான வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே பாதை வசதியுடன் மயானத்திற்கு இடம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
முறைகேடு
வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், இந்திரா காந்தி குடியிருப்பு திட்டம் ஆகியவற்றில் சில பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு மற்றும் உரிய தொகை வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
பென்னாகரம் அருகே புங்கம்பாளையம், காட்டுக்கொள்ளை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த 120 குடும்பத்தினருக்கு பட்டா வழங்கி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்குரிய நிலத்தை அளந்து வழங்குமாறு பலமுறை வலியுறுத்தியும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் முறையான வாழ்விடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்குரிய பட்டா நிலத்தை அளவீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
நீர் வழித்தட ஆக்கிரமிப்பு
அரூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், வரட்டாறு பகுதியில் அரசு புறம்போக்கு நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.