கொரோனா இல்லாத மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தர்மபுரி:
விழிப்புணர்வு வாரம்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவையொட்டி மகளிர் குழுக்களுக்கு இடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு கோலப்போட்டி, ஓவியப்போட்டி, ஸ்லோகன் போட்டி, மீம்ஸ் போட்டி ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் குழுக்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பாதுகாப்பு வழிமுறைகள்
கொரோனா விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இருந்த போதும் கொரோனா இன்னும் நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை. கொரோனா குறித்த விழிப்புணர்வு எப்போதும் இருக்க வேண்டுமே தவிர அது ஒரு நோயாக நம்முடன் இருக்க கூடாது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதையும், பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும்.
கொரோனாவை வெல்ல தடுப்பூசி ஒன்றே நமக்கிருக்கும் ஒரு ஆயுதம். தடுப்பூசி முதல் தவணை செலுத்தி கொண்டவர்கள் 2-ம் தவணையை முறையாக செலுத்தி கொள்ள வேண்டும். 2 தவணைகளையும் முறையாக செலுத்தி கொண்டால் தான் நம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ள முடியும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கொரோனா இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வைத்தியநாதன், உதவி கலெக்டர் சித்ரா விஜயன், உதவி பயிற்சி கலெக்டர் கவுரவ்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேன்மொழி, பயிற்சி துணை கலெக்டர் பூமா, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பார்கவி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவகுரு, சரஸ்குமார், வாசுதேவன், அனுராதா, பாபு, கவுரிசங்கர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.