கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திரண்டதால் பரபரப்பு
முகாம் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
முகாம் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மருத்துவ முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் வாங்கும் முகாம் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக முகாம் நடத்தப்படவில்லை. எனினும் திங்கட்கிழமை தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க வருகின்றனர்.
இதன்படி நேற்று மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு ஏராளமான மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். அவர்களில் சிலர் கோரிக்கை மனுக்கள் அளிக்கவும், சிலர் அடையாள அட்டை, டாக்டர் வழங்கும் மருத்துவ சான்றிதழ் பெறவும் வந்திருந்தனர். ஆனால் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த அவர்கள் கலெக்டரை சந்திக்க திரண்டு போர்ட்டிகோ அருகே சென்றனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை தடுத்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ் (பொது) மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:-
தகவல் தெரிவிக்க வேண்டும்
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் பெற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்துள்ளோம். இங்கு நடைபெற்று வந்த முகாம் ரத்து செய்யப்பட்டது எங்களுக்கு தெரியாது. அதிகாரிகள் முறையாக பதில் தெரிவிக்கவில்லை.
100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்ய எங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டாக்டரால் வழங்கப்படும் சான்றிதழ் தேவைப்படுகிறது.
அந்தச் சான்றிதழ் தேவை என்பதால் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வருகிறோம். ஆனால் கொரோனா பணியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறி சான்றிதழ் வழங்குவதில் தாமதப்படுத்துகின்றனர். இதனால் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்.
எனவே மாற்றுதிறனாளிகள் நலனுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும். முகாம் ரத்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நோட்டீஸ் ஒட்டப்பட்டது
பின்னர் அவர்களை அதிகாரிகள் மீண்டும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
முகாம் ரத்து செய்யப்பட்டதாக அலுவலக முகப்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அலுவலகத்தை தொடர்பு கொண்டு வருமாறு அலுவலக தொலைப்பேசி எண் வழங்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறாளிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.