ரெயில் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை
ரெயில் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
பொள்ளாச்சி
ரெயில் மீது கல் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தண்டவாளங்களை கடக்கும் போதும் மற்றும் ஓடும் ரெயிலில் ஏறுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த ரெயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி உத்தரவிட்டு உள்ளார்.
அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், துணை சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர் வடிக்கரசி ஆகியோரது மேற்பார்வையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது பயணிகளுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தலைமை காவலர்கள் திருப்பதி, சண்முகவடிவேல் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
பயணிகள் ஓடும் ரெயில் ஏறுவது, இறங்குவது மற்றும் படியில் அமர்ந்து பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்ய கூடாது.
ரெயில் விபத்து அதிகம் நடைபெறும் பகுதியில் யாரும் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டாம். செல்போன் பேசிக் கொண்டு தண்டவாளத்தை கடந்து செல்ல கூடாது.
அப்படி கடந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தண்டவாளத்தில் விளையாட்டாக கற்களை வைப்பது, ஓடும் ரெயிலின் மீது கல் வீசினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.