தேன்கனிக்கோட்டையில் 2 இடங்களில் உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் தீ விபத்து-தென்னை, முட்டைக்கோஸ் பயிர்கள் சேதம்
தேன்கனிக்கோட்டையில் 2 இடங்களில் உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தென்னை, முட்டைக்கோஸ் பயிர்கள் சேதமடைந்தன.;
தேன்கனிக்கோட்டை:
மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன
நெய்வேலியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு உயர்மின் அழுத்த கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை பாலாஜிநகர், குல்லம்மகுட்டை ஆகிய இடங்களில் நேற்று திடீரென உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து கீழே விழுந்து தீப்பிடித்தன.
இந்த தீ அருகிலிருந்த விளை நிலங்களில் மளமளவென பரவியது.
இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களும், கீரை வகைகளும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
பரபரப்பு
இந்த தீ விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையம், மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விளை நிலங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சார வினியோகத்தை துண்டித்தனர். இதையடுத்து அவர்கள் அறுந்து விழுந்த உயர்மின் அழுத்த கம்பிகளை சீரமைத்தனர். உயர் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.