இலங்கை அகதிகள் முகாம்களில் அதிகாரிகள் ‘திடீர்’ ஆய்வு
இலங்கை அகதிகள் முகாம்களில் அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரணி
பையூர், வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பையூர் ஊராட்சி அகதிகள் முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
அந்த முகாமுக்கு நேற்று மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிர்வாக அலுவலர்) பி.கோவிந்தசாமி, மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் ஆர்.முருகன், அகதிகள் முகாம் தனித் தாசில்தார் க.அமுல், ஆரணி தாசில்தார் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லலிதா ஆகியோர் திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
குடிநீர் பிரச்சினை
நாங்கள் இப்பகுதியில் 32 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகளாக தஞ்சமடைந்தோம். இன்று வரை ஒரே இடத்தில் தகடுகளால் அறை அமைத்துத் தங்கி வசித்து வருகிறோம்.
இங்கேயே எங்களது குழந்தைகள் பிறந்து பெரிய ஆளாகி திருமணம் செய்து கொண்டனர். எங்களுக்கு தமிழகத்திலேயே குடியுரிமை பெற்றுத் தர வேண்டும்.
இந்த இடத்தில் எங்களுக்குப் போதிய வசதியில்லை. வேறு இடத்துக்கு மாற்றித் தர வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
பையூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதை உயர்த்தி தர வேண்டும். குடிநீர் பிரச்சினை அவ்வபோது இருந்து வருகிறது. அதை சீரமைத்துத் தர வேண்டும். தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வீடு கட்டித்தர நடவடிக்கை
அதற்கு, அங்கிருந்த பையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இலங்கை அகதிகள் முகாம் குடியிருப்பில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 286 பேர் உள்ளனர்.
அவர்களுக்கு தச்சூர் பகுதியில் பசுமை வீடு போல தனித்தனியே கட்டித் தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அது கூடிய விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின்போது இலங்கை அகதிகள் முகாம் வருவாய் ஆய்வாளர் வெங்கட்ராமன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா, ஆரணி டவுன் வருவாய் ஆய்வாளர் வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.
வந்தவாசி சாலை முகாமில் ஆய்வு
அதைத்தொடர்ந்து ஆரணி-வந்தவாசி சாலையில் வேலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு 63 குடும்பங்களை சேர்ந்த 196 பேர் வசித்து வருகின்றனர். அவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.