கொரோனா நோய் தொற்றை பூஜ்ஜியமாக மாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்ைற பூஜ்ஜியமாக மாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் டி.மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினை குறைத்திடும் பொருட்டு ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை வாரியாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடுபட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி முகாம்கள் மூலமாகவும், வீடு, வீடாக சென்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்தி 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி முகாம்கள்
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பாக அனைத்து தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் திருமணம், அரசியல் மற்றும் அரசியல் சாரா கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை முன்னதாக அறிந்து அவ்விடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பூஜ்ஜியமாக மாற்றிட...
மேலும் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், கடைவீதிகள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தனிக்கவனம் செலுத்தி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்துத்துறை அலுவலர்களும் சிறப்பான முறையில் பணியாற்றி நோய் தொற்ைற பூஜ்ஜியமாக மாற்றிட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, துணை இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.