தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

விழுப்புரம் நகரில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Update: 2021-08-09 16:58 GMT
விழுப்புரம், 

தற்போது ஆடி மாதம் நெல், மக்காச்சோளம், பருத்தி, காய்கறி விதைகள் வினியோகம் அதிகம் நடைபெறுவதால் தரமான விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும், சட்டதிட்டங்களுக்குட்பட்டு விவசாயிகளுக்கு விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை இயக்குனரின் உத்தரவின்படி பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு தலைமையில் விதை ஆய்வாளர்கள் சவுந்தர்ராஜன், தமிழ்வேல், செந்தில்குமார், அரவிந்த்ராஜ் ஆகியோர் அடங்கிய பறக்கும்படை அதிகாரிகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

எச்சரிக்கை

இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை, நேருஜி சாலையில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளை பரிசோதித்து தரமான விதைகள்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்றும், உரிய அங்கீகாரம் பெற்றுத்தான் விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, உரிய அங்கீகாரம் பெறாமல் விதை விற்பனை நிலையங்கள் இயங்கினாலோ அல்லது தரமற்ற விதைகளை விற்பனை செய்தாலோ ஆய்வின்போது கண்டறியப்பட்டால் அந்த விதை விற்பனை நிலையங்களுக்கு விற்பனை தடை விதிக்கப்படுவதோடு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

நடவடிக்கை

மேலும் இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அரசு உரிமம் பெற்று 346 விதை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் விதைகள் தரமான விதைகள்தானா என்றும், உரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமற்ற விதைகளை விற்பனை செய்வதால் முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. ஆகவே தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அந்த விற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்