ரூ.6 கோடியில் குடகனாறு அணை ஷட்டர்கள் சீரமைக்கும் பணி

வேடசந்தூர் அருகே உள்ள குடகனாறு அணையில் ரூ.6 கோடியில் ஷட்டர்கள் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது என்று காந்திராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.;

Update: 2021-08-09 16:49 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் தலைமை தாங்கி பேசினார். தாசில்தார் மணிமொழி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டுறவு சார்பதிவாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. காந்திராஜன் கலந்து கொண்டு, 1,604 பேருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கி பேசினார். 

அப்போது அவர் பேசுகையில், வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையில் கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணையில் தற்போது உள்ள 11 அடி தண்ணீரில் குறைந்த அளவு தண்ணீரை வெளியேற்றப்படும். பின்னர் அனைத்து ஷட்டர்களும் ரூ.6 கோடி செலவில் சீரமைக்கும் பணி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த பணி விரைந்து முடிக்கப்பட்டு, அணைக்கு வரும் தண்ணீரை முழுமையாக தேக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் விவசாய நிலத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்திடும் என்றார்.

மேலும் செய்திகள்