டோக்கன் வழங்காததால் இ-சேவை மையத்தை கண்டித்து சாலை மறியல்

டோக்கன் வழங்காததால் இ-சேவை மையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-09 16:14 GMT
வந்தவாசி

டோக்கன் வழங்காததால் இ-சேவை மையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இ-சேவை மையம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி வளாகத்தில் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு அதிக அளவிலான கூட்டம் கூடுவதால், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று ஆதார் பெயர் திருத்தம் மற்றும் நீக்கல் போன்ற சேவைகளுக்கு டோக்கன் கொடுப்பது வழக்கம். 

இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) என்பதால் 500-க்கும் மேற்பட்டோர் கூடினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவரையும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். 

பொதுமக்கள் சாலை மறியல்

வெகுநேரமாக காத்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இ-சேவை மையத்தை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர் பழனி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

போக்குவரத்து பாதிப்பு

இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த சாலை மறியலால் வந்தவாசி-காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்