தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ.சார்பில் மனிதசங்கிலி போராட்டமும் நடந்தது.

Update: 2021-08-09 15:22 GMT
சீர்காழி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ.சார்பில் மனிதசங்கிலி போராட்டமும் நடந்தது. 
ஆர்ப்பாட்டம் 
சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத்தலைவர் சம்பத், மாவட்ட தலைவர் சம்பத், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மணி, மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரபாகரன், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் பாபு, ராஜேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார் மயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். மாநில கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களை சுதந்திரமாக செயல்படுத்தவேண்டும்.  நலவாரிய நிர்வாகத்தையும், நல நிதியையும் மத்திய அரசு பறிக்கக்கூடாது. ஒரு நபருக்கு 10 கிலோ உணவு தானியம் வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
மனிதசங்கிலி போராட்டம்
சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனு மணி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியை சேர்ந்த பிரபாகரன், அசோகன், வக்கீல் பிரகாசம், நாகையா, ஸ்டாலின்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை 
இதேபோல் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட கவுன்சில் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் தலைவர் நக்கீரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர்கள் கலியமூர்த்தி, சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். 
மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ.மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யூ. மின்வாரிய சங்க உதவி செயலாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.
செம்பனார்கோவில் 
தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் கடைவீதியில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்