உடன்குடியில் ஆசிரியையிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற வாலிபர் கைது

உடன்குடியில் வீடுபுகுந்து ஆசிரியையிடம் 7½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-09 14:43 GMT
குலசேகரன்பட்டினம்:
உடன்குடியில் வீடுபுகுந்து ஆசிரியையிடம் 7½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கிலி பறிப்பு
உடன்குடி புதுமனை புதுத்தெருவைச் சேர்ந்த ஜான்சுந்தர்ராஜ் மனைவி வசந்தி (வயது 52). இவர் உடன்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி இரவு வீட்டின் பின்புறம் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் சுவர் ஏறி குதித்து வந்த மர்ம நபர் பதுங்கி இருந்து வசந்தி கழுத்தில் இருந்த 7½ பவுன் தங்க தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றார்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்தி வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
வாலிபர் கைது
இந்தநிலையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கல்லாமொழி பள்ளிவாசல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முண்ணுக்குப்பின் முரணாக பேசினார்.
விசாரணையில், அவர் குமரி மாவட்டம் பாலப்பள்ளம் ஏழுவிளைப்பற்று பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பது தெரியவந்தது. மேலும், அவர் உடன்குடியில் ஆசிரியையிடம் வீடுபுகுந்து நகையை பறித்ததை ஒப்புக் கொண்டார். அவரிடம் நகையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------------

மேலும் செய்திகள்