கோவை
கோவை மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனால் கொரோனா 3-வது அலை அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் ரத்தினபுரி, சாய்பாபா காலனி, ராமநாதபுரம், துடியலூர் உள்பட 32 இடங்களில் நேற்று கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி குறித்த அறிவிப்பு நேற்று காலை 8 மணிக்கு வெளியானது.
காலை 9 மணிக்கு பொது மக்கள் வரிசையில் நின்று டோக்கன் வாங்கினர்.சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
2-வது தவணை தடுப்பூசி மட்டுமே நேற்று செலுத்தப்பட்டது.நேற்று ஒவ்வொரு மையத்திலும் தலா 300 பேர் வீதம் 32 இடங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 600 பேருக்கு கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி யை கடைபிடிக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தினர்.