தூத்துக்குடி அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-08-09 14:36 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என்று கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மனு
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை அளித்து வருகின்றனர். இதற்காக கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் அருகே மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை போட்டுவிட்டு செல்கின்றனர்.
நிறுத்த வேண்டும்
உப்பாற்று ஓடை பாதுகாப்பு இயக்கம் மற்றும் மேலத்தட்டப்பாறை சுற்றுவட்டார கிராம மக்கள் ஆம் ஆத்மி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வி.குணசீலன் மற்றும் என்.லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க கீழதட்டப்பாறை, உமரிக்கோட்டை, வரதராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், தெற்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உள்ளனர். இந்த பகுதியில் உப்பாற்று ஓடை, குறிஞ்சான் ஓடை, கொம்பாடி ஓடை ஆகிய நீர் வழித்தடங்கள் உள்ளன. இந்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் நீர் நிலைகள் அழிந்து மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும். எனவே, உப்பாற்று ஓடை வழித்தடத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
அமலைச் செடிகள்
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், விவசாய அணி செயலாளர் ஏ.சரவணன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு உட்பட்ட சிவத்தையாபுரம், பேய்க்குளம், ஆறுமுகமங்கலம், கொற்கை, பழையகாயல் ஆகிய குளங்களில் பல ஆண்டுகளாக அமலைச் செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இதனால் குளங்கள் தூர்ந்து போய் 15 நாட்களுக்கு கூட தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. மேலும் தண்ணீரும் மாசுபட்டு உள்ளது. எனவே, அமலைச் செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
கல்குவாரி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊருக்கு அருகே உள்ள தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் கிராமத்தின் மானாவாரி குளமான நாரைக்குளம் மற்றும் சுடுகாடு, இடுகாடு பகுதிகளை ஆக்கிரமித்து கிரஸர் அமைத்து உள்ளனர். இதனால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பெறும் இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். குளம், சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட செயலாளர் சே.மகேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், கோவில்பட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கான சாவி மற்றும் பாதுகாப்பு அறைக்கான சாவியை அம்பேத்கர் மக்கள் இயக்க சிலை பராமரிப்பு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், அம்பேத்கர் சிலை இடமாற்றத்துக்கான இழப்பீடு தொகை ரூ.3 லட்சத்தை தனிநபருக்கு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
உப்பு உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் கிரகதுரை, பொருளாளர் தேன்ராஜ் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் சங்கத்தின் செயலாளர் தனபாலன் மற்றும் அவரது மருமகன் மீது கடந்த 7-ம் தேதி அய்யனார்புரம் உப்பளத்தில் சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்தி, அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்து உள்ளனர். மேலும், அவர்களது காரையும் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரது மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து இனிமேல் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் தடுத்திடவேண்டும். எங்கள் சங்கத்தினர் அனைவரும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இன்றி தொழில் செய்திட தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்