மாமல்லபுரத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவின்பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழிகாட்டி நெறிமுறைகள் கடுமையான பின்பற்றப்பட்டு வருகின்றன. முக கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்து கொண்டு புராதன சின்னங்களை பார்வையிடுதல் போன்றவை குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

Update: 2021-08-09 09:31 GMT
இந்த நிலையில் மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகளுக்கு நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆடல், பாடல், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக சுற்றுலா வரும் பயணிகள் எப்படி சமூக இடைவெளியை கடைபிடித்து சுற்றி பார்க்க வேண்டும். எப்படி கைகளை சுத்தம் செய்து முக கவசம் அணிந்து சுற்றி பார்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சினிமா பாடல் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பாடல்களுக்கு பெண் கலைஞர்கள் நடனம் ஆடி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தனர். அப்போது நாடக கலைஞர்கள் முக கவசம் அணிந்து வராத ஒவ்வொரு பயணிகளையும் தங்கள் அருகில் அழைத்து நாடக வசனங்கள் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அன்புடன் அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேஷ், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்