சென்னை விருகம்பாக்கத்தில் 2 பெண்களிடம் நூதன முறையில் பணம் மோசடி
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த காமாட்சி என்பவர் முகநூல் பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கிள் விற்பனை விளம்பரத்தை பார்த்து அதில் இருந்த செல்போனில் தொடர்பு கொண்டார்.
மறுமுனையில் பேசிய ஆசாமி, மோட்டார்சைக்கிள் வேண்டுமானால் ரூ.500 ‘கூகுள் பே’ வாயிலாக அனுப்பும்படி கூறி ‘லிங்க்’கை அனுப்பினார். அதை நம்பி, காமாட்சி பணத்தை அனுப்பினார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து மேலும் ரூ.36 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி, வேலை வாய்ப்பு வாங்கி தரும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அவரது ‘பயோ டேட்டா’ மற்றும் அவரது வங்கி கணக்கு, ரகசிய குறியீடு எண் உள்ளிட்ட விபரங்களை கேட்டு வாங்கினார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்தும் ரூ.35 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இந்த நூதன பண மோசடி குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.