விடுதியில் ஆய்வுக்கு வந்த பெண் அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் வாங்கி சென்றதாக போலீசில் புகார்

சென்னை போரூர், ராஜகோபால் தெருவில் அருள்சோபி என்பவர் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். இங்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மகளிர் ஆணையத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி காரில் வந்த 2 பெண் அதிகாரிகள் இந்த விடுதியில் ஆய்வு செய்தனர்.

Update: 2021-08-09 06:18 GMT
அப்போது விடுதியில் குறைபாடுகள் இருப்பதாக கூறினர். அவர்களை அழைத்து வந்த கார் டிரைவர், ரூ.30 ஆயிரம் கொடுத்தால் அதிகாரிகளை சரி செய்துவிடலாம் என்றார். அதை நம்பி விடுதி உரிமையாளர் ரூ.30 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர்கள் உண்மையிலேயே அரசு அதிகாரிகள் தானா? என சந்தேகம் அடைந்த அருள்சோபியின் கணவர், இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போரூர் போலீசார் வந்து விசாரித்தனர். பின்னர் அவர்களை அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து அருள்சோபியின் கணவர், போரூர் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதி்ல், தங்கள் விடுதியில் அதிகாரிகள் எனக்கூறிய ஆய்வு செய்த பெண்கள், ரூ.30 ஆயிரம் வாங்கி சென்றனர். அவர்கள் உண்மையான அதிகாரிகளா? என சந்தேகம் இருப்பதால் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார், வந்தவர்கள் உண்மையிலேயே அரசு அதிகாரிகள் தானா? அல்லது அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்து சென்றனரா? என்ற கோணத்தில் அவர்கள் வந்த கார் டிரைவரை அழைத்து விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்