அதிக தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா நம்மை விட்டு முழுமையாக போகவில்லை. பொதுமக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-08-09 05:09 GMT
நலத்திட்ட உதவிகள்
சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முன்கள பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.10 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் நடைபெற்றது. மதுரவாயல் எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

முழுமையாக போகவில்லை
பொதுமக்கள் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும். நம்மை தற்காத்துக்கொள்ள அது அவசியம். கொரோனா நம்மை விட்டு முழுமையாக போகவில்லை. உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். பொதுமுடக்க நேரத்தில் முறையாக மருந்து சாப்பிடாததால்தான் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு வரும்போது இறப்பு வரை இழுத்து சென்றது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சி முதல் இடம்
தற்போது தமிழகம் முழுவதும் தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துகிறோம். 3 மாதத்தில் 1 கோடியே 90 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளோம். இதுவரை 2½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்தியதில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்