காரில் கடத்திய ரூ.8 லட்சம் செம்மரம் பறிமுதல். சினிமா பாணியில் 4 கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்று மடக்கினர்
ஜோலார்பேட்டை அருகே செம்மரம் கடத்திச்சென்ற காரை சினிமா பாணியில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் துரத்திசென்று போலீசார் மடக்கி, டிரைவரை கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை
வேகமாக சென்ற கார்
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி கூட்டு ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது திருப்பத்தூர் நோக்கி சென்ற காரை போலிசார் நிறுத்த சைகை செய்தனர். உடனே அந்த கார் நிற்பது போல் நின்று திடீரென மின்னல் வேகத்தில் பறந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். காரில் சென்றவர்கள் திருப்பத்தூர் வழியாக சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என நினைத்து தாமலேரிமுத்தூர் ரெயில்வே மேம்பாலம் வழியாக புதுப்பேட்டை நோக்கி செல்லும் சாலையில் சென்றனர்.
துரத்தி சென்று மடக்கினர்
சுமார் 4 கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்ற போலீசார் தாமலேரிமுத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே காரை மடக்கினர். உடனே காரை நிறுத்திவிட்டு அதில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். கார் டிரைவர் மட்டும் பிடிபட்டார். காரில் போலீசார் சோதனை செய்தபோது காரில் 6 செம்மர கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்திவந்ததும், அதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் என்பதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து கார் டிரைவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா பெரியாதள்ளபாடி அருகே உள்ள வலசை பகுதியை சேர்ந்த முகமது ரெட்டி மகன் முகம்மது கவுப் (வயது 30) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கார் ஓட்டுவதற்காக கூலி கொடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த 2 பேர் என்னை அழைத்துச் சென்றனர் என்று கூறினார். வேறு எதுவும் எனக்கு தெரியாது என்று கூறினார்.
செம்மர கட்டைகள் பறிமுதல்
அதைத்தொடர்ந்து அவரையும், பிடிபட்ட கார் மற்றும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை ஆகியவற்றையும் ஜோலார்பேட்டை போலிசார், திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனச்சரக அலுவலர் பிரபு வழக்குப் பதிவு செய்து செம்மரக்கட்டை மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முகமது கவுப் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய 2 பேரை வலைவிசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் 4 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று காரை மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.