கர்நாடக எல்லையில் காத்து நிற்கும் சரக்கு லாரிகள்

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்டு கெடுபிடி செய்வதால், கர்நாடக எல்லையில் சரக்கு லாரிகள் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-08-09 03:23 GMT
கூடலூர்

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்டு கெடுபிடி செய்வதால், கர்நாடக எல்லையில் சரக்கு லாரிகள் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ்

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான லாரிகளில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் குண்டல்பெட்டில் இருந்து முத்தங்கா சரணாலயம் வழியாக வயநாடுக்கு லாரிகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கேரளாவில் இருந்து வரும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. 

அதன்படி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், இ-பாஸ், தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் ஆகியவைகளை வைத்திருக்க வேண்டும். ஆனால் சரக்கு வாகன டிரைவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எனினும் கர்நாடக மாநிலத்துக்கு வரும் பொதுமக்கள் மட்டுமின்றி சரக்கு வாகன டிரைவர்களும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

எச்சரிக்கை

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கூடலூர்-கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத டிரைவர்கள், பொதுமக்களை கர்நாடக போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் அவர்களுக்கும், சரக்கு வாகன டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. 

மேலும் பல மணிநேரம் மாநில எல்லையில் சரக்கு வாகன டிரைவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பின்னர் இனிவரும் நாட்களில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று எச்சரித்து கர்நாடகாவுக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் கேரளா மட்டுமின்றி தமிழக டிரைவர்களும் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். 

நீண்ட வரிசையில்...

இதற்கிடையில் கூடலூர்-கர்நாடகா எல்லையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாத சரக்கு வாகன டிரைவர்களை நேற்று எல்லையில் கர்நாடக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த சரக்கு லாரிகள் முதுமலை புலிகள் காப்பக சாலையில் நீண்ட தூரம் நிறுத்தி வரிசையாக வைக்கப்பட்டது. மேலும் அடிக்கடி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீலகிரி போலீசார், கர்நாடக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் சரக்கு வாகனங்களை கர்நாடகாவுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதன் காரணமாக சரக்கு வாகன டிரைவர்கள் மாநில எல்லையில் தவித்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு பிறகு சரக்கு லாரிகளை கர்நாடக அதிகாரிகள் அனுமதித்தனர். இதற்கு ஒரு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்று சரக்கு வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பல்வேறு இடர்பாடுகள்

இதுகுறித்து வாகன டிரைவர்கள் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவிய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக சரக்கு வாகன டிரைவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது கர்நாடக அரசு கட்டுப்பாடு என்ற பெயரில் கெடுபிடி காண்பித்து வருகிறது. ஒரு மாநிலத்தில் சரக்குகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் சில நாட்கள் பயணத்துக்கு பிறகு மற்றொரு மாநிலத்தை அடைந்து, அந்த சரக்குகளை அங்கு இறக்கிவிட்டு, அங்கிருந்து வேறு சரக்குகளை ஏற்றிக்கொண்டு திரும்பி வர வேண்டிய நிலை உள்ளது. 

இதுபோன்ற நிலையில் எவ்வாறு ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் பெற முடியும். இதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. எனவே இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் ஆதங்கத்துடன் கூறினர்.

மேலும் செய்திகள்