ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்க தடை: மேட்டூர் காவிரி ஆறு வெறிச்சோடியது

ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-08-08 22:31 GMT
மேட்டூர்:
ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.
தர்ப்பணத்துக்கு தடை
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை நாட்களில் சேலம் மாவட்டம் மேட்டூர்  காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆடி அமாவாசையில் மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடவும், படித்துறைகளில் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஆடி ஆமாவாசை தினமான நேற்று மேட்டூர் காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க காவிரி பாலம் அருகே ஆற்றின் நுழைவுவாயில் பகுதிகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர்.
காவிரி ஆறு வெறிச்சோடியது
அப்போது அவர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். தடையை மீறி வேறு வழியாக செல்ல முயன்றவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். 
முன்னோர்களுகு தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் விதிக்கப்பட்ட தடையால் காவிரி ஆற்றின் படித்துறைகள் மற்றும் காவிரி ஆறு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்