சுற்றுலா பயணிகளுக்கு தடை: ஏற்காடு வெறிச்சோடியது

சுற்றுலா பயணிகளுக்கு தடை காரணமாக நேற்று ஏற்காடு வெறிச்சோடியது.

Update: 2021-08-08 22:15 GMT
ஏற்காடு:
சுற்றுலா பயணிகளுக்கு தடை காரணமாக நேற்று ஏற்காடு வெறிச்சோடியது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக ஏற்காட்டுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் இருந்தனர். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் ஏராளமானோர் அங்கு படையெடுத்தனர். இதனிடையே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மற்ற நாட்களில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் மற்றும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழுடன் வரும் சுற்றுலா பயணிகளுக்கே ஏற்காடு செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெறிச்சோடியது
இந்தநிலையில் விடுமுறை தினமான நேற்று ஏற்காட்டுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்களை மலை அடிவாரத்தில் சேலம் மாநகர போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். இதனால் கார்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக நேற்று ஏற்காடு ஆட்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் முக்கிய சாலைகளும் வாகன போக்குவரத்து இல்லாமல் காணப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி கடை நடத்தி வரும் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறினர்.

மேலும் செய்திகள்