பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் நூதன போராட்டம்-சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பள்ளத்தில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பள்ளத்தில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சில இடங்களில் இந்த திட்டப்பணிகள் முடிவடைந்து விட்டன.
ஆனால் தாதகாப்பட்டி பகுதியில் மட்டும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பல மாதங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. தாதகாப்பட்டியில் சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடை திட்டத்திற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மேலும், அங்கு பாறைகள் நிறைந்து உள்ளதால் அதை உடைப்பதற்கான பணி மெதுவாக நடந்து வருகிறது.
இந்தநிலையில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்களும், அந்த பகுதி பொதுமக்களும் நேற்று காலை தாதகாப்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வரும் இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி அங்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சமாதானம்
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர். அப்போது, மெதுவாக நடக்கும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.