சென்னிமலை அருகே ரெயில் மோதி வாலிபர் பலி- செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்ததால் பரிதாபம்

சென்னிமலை அருகே தண்டவாளத்தை செல்போன் பேசிக்கொண்டே கடந்த வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-08 21:53 GMT
சென்னிமலை
சென்னிமலை அருகே தண்டவாளத்தை செல்போன் பேசிக்கொண்டே கடந்த வாலிபர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் இறந்து கிடந்தார்
ஈரோடு அருகே உள்ள வேப்பம்பாளையம், ராயல் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி இவருடைய மகன் சவுடேஸ்வரன் (வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் ஜொஸ்வா டேனியேல் (20), கிஷோர் (20), ஆல்வின் மேத்யு, கர்ணன் (19), ஜான் (20) ஆகியோருடன் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புங்கம்பாடி பகுதியில் உள்ள ரெயில் பாலத்தில் தாங்கள் வாங்கி சென்ற பரோட்டாவை சாப்பிட்டுள்ளார்.
அப்போது சவுடேஸ்வரன் சிறுநீர் கழித்து வருவதாக கூறி செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாள பகுதியில் நடந்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவருடைய நண்பர்கள் சென்று பார்த்தனர். அப்போது பலத்த காயங்களுடன் சவுடேஸ்வரன் தண்டவாளம் ஓரம் இறந்து கிடந்துள்ளார்.
ரெயில் மோதி சாவு
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர்கள் வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சவுடேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை ஐ.ஆர்.டி.டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், சவுடேஸ்வரன் செல்போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்து சென்றபோது திருப்பூரில் இருந்து ஈரோடு மார்க்கமாக சென்ற ெரயில் அவர்் மீது மோதி இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்