பசவராஜ் பொம்மையுடன் மந்திரி ஆனந்த்சிங் சந்திப்பு; வேறு துறையை ஒதுக்க கோரிக்கை

இலாகா ஒதுக்கீடு தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேசிய மந்திரி ஆனந்த்சிங், வேறு துறையை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-08 20:53 GMT
பெங்களூரு:

பகிரங்கமாக வெளிப்படுத்தினர்

  கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த ஜூலை 28-ந் தேதி பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டு, புதிதாக 29 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் மந்திரிகள் ஆனந்த்சிங்கிற்கு சுற்றுலா துறையும், எம்.டி.பி.நாகராஜிக்கு நகரசபை நிர்வாகத்துறையும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த துறையை விரும்பாத அவர்கள் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

  இந்த நிலையில் பெங்களூருவில் பசவராஜ் பொம்மையை அவரது வீட்டில் மந்திரி ஆனந்த்சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, தனக்கு வேறு இலாகாவை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுகுறித்து பரிசீலிப்பதாக பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளார்.

மாலை அணிவித்து மரியாதை

  இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பசவராஜ் பொம்மை, "ஆனந்த்சிங் தனது அதிருப்தியை கூறினார். அவரின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அவரது சுயமரியாதையை காக்க வேண்டியது எனது கடமை. அதே போல், அவரும் ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எம்.டி.பி. நாகராஜையும் அழைத்து பேசுவேன். இலாகா ஒதுக்கீடு செய்த பிறகு இதுபோன்ற அதிருப்தி வருவது சகஜம் தான். இதை நான் சரிசெய்வேன். அதற்கான பலம் எனக்கு உள்ளது" என்றார்.

  முன்னதாக முன்னாள் முதல்-மந்திரி நிஜலிங்கப்பாவின் நினைவு தினத்தையொட்டி விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

  அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நிஜலிங்கப்பாவின் வாழ்க்கை வரலாறு இன்றைய மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு முன்மாதிரி ஆகும். அவர் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவில் ஒரு தலைவராக உயர்ந்தார். அவர் மிக சிறந்த நாடாளுமன்றவாதியாக இருந்தார். அனைவருடனும் நல்ல தோழமையுடன் பழகினார். கர்நாடகத்தில் முக்கியமான நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றியவர் அவரே.

  வட கர்நாடகம், தென் கர்நாடகம் என்ற பாகுபாட்டை அகற்றி அகண்ட கர்நாடகத்தை ஏற்படுத்த போராடியவர். இதற்கு முன்பு சிக்காவி தொகுதியில் இருந்து நிஜலிங்கப்பா தேர்ந்து எடுக்கப்பட்டு முதல்-மந்திரி ஆனார். இப்போது அதே தொகுதியில் இருந்து நான் வெற்றி பெற்று முதல்-மந்திரி ஆகியுள்ளேன். இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் ஆகும்" என்றார்.
  இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்