பெங்களூருவில் ரவுடி கொலையில் பெண்கள் உள்பட 7 பேர் கைது

பெங்களூருவில் நடந்த ரவுடி கொலையில் பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2021-08-08 20:46 GMT
பெங்களூரு:

ரவுடி கொலை

  பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மஜர்கான்(வயது 48). ரவுடியான இவர் மீது டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை டி.ஜே.ஹள்ளி அருகே சிவராஜ் சாலையில் உள்ள தனது நண்பரும், ரவுடியுமான முகமது ஷபாஸ் வீட்டின் முன்பு மஜர்கான் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் டி.ஜே.ஹள்ளி போலீசார் அங்கு விரைந்து சென்று மஜர்கானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில் மஜர்கானை அவரது நண்பர் பெரோஸ் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. கொலை சம்பவம் குறித்து டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பெரோஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடிவந்தனர்.

பெண்கள் உள்பட 7 பேர் கைது

  இந்த நிலையில் பெரோசும், அவரது குடும்பத்தினரும் ஹெப்பால் மேம்பாலம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாகவும், அங்கு இருந்து வெளியூருக்கு தப்பி செல்ல முயல்வதாகவும் டி.ஜே.ஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பெரோஸ், அவரது குடும்பத்தை சேர்ந்த நவாஸ், சாகிப், ஜாகீர், ரேஷ்மா, ஹசினா, சம்னா ஆகியோரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

  அதாவது மஜர்கானும், முகமது ஷபாசும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மஜர்கானின் 2-வது மனைவியை முகமது ஷபாசின் உறவினரான சாகிப் என்பவர் ஆந்திராவுக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மஜர்கானுக்கும், முகமது ஷபாசுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து உள்ளது.

ஆபாசமாக திட்டி...

  இந்த நிலையில் கடந்த சில தினங்களாக முகமது ஷபாசிடமும், அவரது குடும்பத்தினருடமும் மஜர்கான் சண்டை போட்டு வந்து உள்ளார். நேற்று முன்தினம் காலை முகமது ஷபாசின் வீட்டிற்கு சென்ற மஜர்கான் வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்த முகமது ஷபாசின் உறவுக்கார பெண்ணான ரேஷ்மாவை ஆபாச வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் வீட்டிற்குள் சென்று தெரிவித்து உள்ளார்.

  பின்னர் வீட்டில் இருந்து ரேஷ்மா, ஹசினா, சம்னா, பெரோஸ், நவாஸ், சாகிப், ஜாகீர் ஆகியோர் வெளியே வந்து மஜர்கானை அடித்து, உதைத்து உள்ளனர். பின்னர் 7 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் குத்திக்கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முகமது ஷபாஸ் உள்பட மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்