பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் 4 பேர் சிக்கினர்

பெங்களூருவில் வெவ்வேறு திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன.

Update: 2021-08-08 20:18 GMT
பெங்களூரு:

3 பேர் கைது

  பெங்களூரு பண்டேபாளையா போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில், திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சித்ரதுர்காவை சேர்ந்த குருபிரசாத் (வயது 28), பெங்களூரு ஆந்திரஹள்ளியில் வசித்து வரும் வெங்கடேஷ் என்கிற அம்பரீஷ் (19), கூட்லுவை சேர்ந்த மஞ்சுநாத் (35) என்பது தெரியவந்தது.

  இவர்கள் 3 பேரும் ராஜகோபால்நகர், நந்தினி லே-அவுட், ஜே.பி.நகர், பேடரஹள்ளி, பண்டேபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து தங்கநகைகள், வெள்ளி பொருட்களை திருடி வந்தது தெரியவந்தது. மேலும் வெங்கடேஷ் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

சிறையில் வைத்து திட்டம்

  அப்போது அவருக்கு குருபிரசாத், மஞ்சுநாத்துடன் பழக்கம் கிடைத்து உள்ளது. சிறையில் இருந்து வெளியே சென்ற பின்னர் 3 பேரும் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட சிறையில் வைத்தே திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்ததும் 3 பேரும் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டும் வந்து உள்ளனர்.

  கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 350 கிராம் தங்கநகைகள், 360 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.17¼ லட்சம் ஆகும். கைதான 3 பேர் மீதும் பண்டேபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மற்றொரு வழக்கு

  இதேபோல், பெங்களூரு பேடரஹள்ளி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்மநபர், நாற்காலியில் வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் வீட்டின் முன்பு நின்ற விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றார்.

  இதுகுறித்து மோட்டார் சைக்கிள் உாிமையாளர் அளித்த புகாரின்பேரில் பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக அமித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள், 18 கிராம் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு ரூ.2.80 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்