கர்நாடகத்தில், மந்திரி பதவி கிடைக்காத பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி; கட்சி மேலிடத்திற்கு புதிய சிக்கல்

கர்நாடகத்தில், மந்திரி பதவி கிடைக்காத பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் சிலர் ரகசிய கூட்டம் நடத்தியதால் கட்சி மேலிடத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-08 20:15 GMT
பெங்களூரு:

அதிருப்தியில் மந்திரிகள்

  கர்நாடகத்தில் புதிய மந்திரிகளுக்கு நேற்று முன்தினம் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஆனந்த்சிங்கிற்கு சுற்றுலா, மந்திரி எம்.டி.பி.நாகராஜ் நகரசபை நிர்வாகம், சசிகலா ஜோலே அறநிலையத்துறை, சோமண்ணா வீட்டு வசதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் பகிரங்கமாக தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

  இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை அவரது காவேரி இல்லத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். அப்போது எதிர்பார்த்த துறைகள் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள மந்திரிகள் குறித்து முதல்-மந்திரி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின்போது, அதிருப்தியில் உள்ள மந்திரிகள் மற்றும் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தான் பேசி சரிசெய்வதாகவும், நீங்கள் கொரோனா தடுப்பு, வெள்ள நிவாரண பணிகளில் கவனத்துமாறும் பசவராஜ் பொம்மைக்கு எடியூரப்பா அறிவுறுத்தியதாக தெரிகிறது.

பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

  மந்திரி பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, ராஜூகவுடா, திப்பாரெட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சிலர் ரகசிய கூட்டம் நடத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது பா.ஜனதா மேலிடத்திற்கு தலைவலியையும், சிக்கலையும் ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு இடையே ஆனந்த்சிங்கை தொடர்ந்து இலாகா ஒதுக்கீடு அதிருப்தி காரணமாக பசவராஜ் பொம்மையை எம்.டி.பி.நாகராஜும் சந்தித்து பேசினார்.

  அப்போது பசவராஜ் பொம்மை, "உங்களுக்கு மந்திரி பதவி கொடுத்ததே பெரிய விஷயம். நீங்கள் வந்து வேறு இலாகா ஒதுக்குமாறு கேட்டால் எப்படி. உங்கள் தொகுதியில் வெற்றி பெற முடிந்ததா?. ஒசக்கோட்டையில் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ள சரத் பச்சேகவுடா தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறார். அந்த தொகுதி அவரது வசம் உள்ளது. உங்களால் 4 தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முடியுமா?. இந்த சூழ்நிலையில் வேறு துறையை ஒதுக்குமாறு கேட்பது சரியல்ல" என்று கூறி எச்சரித்து எம்.டி.பி.நாகராஜை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் நிருபர்களிடம் எந்த கருத்தையும் கூறாமல் சென்றுவிட்டார்.

மேலும் செய்திகள்