காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் தீர்த்தவாரி

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது.

Update: 2021-08-08 19:36 GMT
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்வார்கள். தற்போது கொரோனா பரவல் 3-வது அலையை தடுக்கும் பொருட்டு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
திருவிழா நடக்காத நிலையிலும் ஆடி அமாவாசை நாளான நேற்று கோவிலில் ஆகம விதிப்படி கும்ப பூஜை நடந்தது. தொடர்ந்து காரையாறு தாமிரபரணி நதிக்கரையில் தீர்த்தவாரி நடந்தது. பூஜையை தொடர்ந்து பட்டவராயர், பேச்சியம்மாள், சங்கிலி பூதத்தார், தூசி மாடன், மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்