வணிகர்கள் பயன்படுத்தும் அளவைகளை மறுமுத்திரையிடும் முகாம்

வணிகர்கள் பயன்படுத்தும் அளவைகளை மறுமுத்திரையிடும் முகாம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது.

Update: 2021-08-08 19:36 GMT
பெரம்பலூர்:
திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் உத்தரவின்படி, பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையரின் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்கு உட்பட்ட அரியலூர் முத்திரை ஆய்வாளரின் 2021-ம் ஆண்டிற்கான சி காலாண்டு முத்திரை பணி முகாம், பெரம்பலூர் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை வளாகத்தில் வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் முத்திரை பணி முகாம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை துறையூர் ஜெயலெட்சுமி ரைஸ்மில் கட்டிட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மற்றும் துறையூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வணிகர்கள் மேற்கண்ட பணி முகாமில் தங்களது கடைகளில் பயன்படுத்தும் எடைகள் மற்றும் அளவைகளை (மின்னணு தராசுகள், விட்ட தராசுகள், மேஜை தராசுகள், எடை கற்கள் மற்றும் கூம்பிய அளவைகள்) மறுமுத்திரையிடலாம். தவறும் பட்சத்தில் தொழிலாளர் துறை அதிகாரிகளால் நேரடி ஆய்வு மேற்கொள்ளும்போது மறுமுத்திரையிடப்படாத எடையளவுகளை பறிமுதல் செய்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்படும்.
சென்னை தொழிலாளர் ஆணையரின் உத்தரவின்படி ஆ காலாண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக மறுமுத்திரையிட தவறிய வணிகர்களுக்கு தங்கள் எடையளவுகளை தாமத கட்டணம் இல்லாமல் மறுமுத்திரையிட அடுத்த மாதம் 30-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மறுமுத்திரையிட வரும் வணிகர்கள் உரிய ஆவணத்துடன் வர வேண்டும்.
இந்த தகவலை பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்