முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாததால் பொதுமக்கள் ஏமாற்றம்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.;

Update: 2021-08-08 19:36 GMT
அரியலூர்:

தர்ப்பணம் கொடுப்பார்கள்
ஆடி அமாவாசையன்று மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து, கோவில்களில் வழிபாடு செய்வது வழக்கம். இதனால் அன்றயை நீர்நிலைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா 3-ம் அலை ஏற்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு கடந்த 1-ந் தேதி முதல் 3 நாட்கள் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
பொதுமக்கள் ஏமாற்றம்
மேலும் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க ஆடி அமாவாசை, ஆடிப்பூரத்தையொட்டி கோவில்களில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் நகரில் உள்ள பெருமாள் கோவில், சிவன் கோவில், கிருஷ்ணன் கோவில் ஆகியவை நேற்று மூடப்பட்டிருந்தன.
இதனால் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வழக்கமாக பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 10 மணி வரை நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று பக்தர்கள் இல்லாமல் கோவில் வெறிச்சோடியது. பலர் அகத்திக்கீரை, அரிசி, வெல்லம் ஆகியவற்றை வாங்கி பசுமாடுகளுக்கு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்