வாலிபர் கொடூரக் கொலை
நெல்லையில் வாலிபர் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லையில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொடூரக் கொலை
நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டு அருகே வெட்டுவான்கோவில் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் அருகில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது முகம் சிதைக்கப்பட்டு, அவரது உடலின் மீது மோட்டார் சைக்கிளும் போடப்பட்டு கிடந்தது.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பெயிண்டர்
அப்போது, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த உத்தமசிங் மகன் ராஜாசிங் டேவிட் (வயது 24) என்பது தெரியவந்தது. பெயிண்டரான இவர் மீது ஒரு கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்து உள்ளது.
மேலும் ராஜாசிங் டேவிட் கொலை செய்யப்பட்ட குளத்து பகுதிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கிருந்து சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து, குளத்தின் கரைப்பகுதியில் மதுகுடிப்பது வழக்கம்.
முன்விரோதம்?
அவ்வாறு ராஜாசிங் டேவிட்டை மதுக்குடிக்க அழைத்து வந்து மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும், முகத்தை சிதைத்தும் கொடூரமாக கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர் மீது கொலை வழக்கு உள்ளதால் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லையில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.