மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்
மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி, ஆக.9-
அரியாங்குப்பம் தொகுதி அ.தி.மு.க. கிழக்கு மாநில துணை செயலாளர் அய்யப்பன் தலைமையில் அவரின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், அரியாங்குப்பம் வட்டார தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறாததால் முடங்கி போகாது. இதற்கு முன்பு தோல்வியை கண்டிருந்த நிலையில், நம்பிக்கையுடன் மீண்டு வந்திருக்கிறது. அதேபோல் மீண்டும் காங்கிரஸ் புத்துயிர்ப்போடு எழுந்து வரும். மத்தியிலும், மாநிலத்திலும் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
முதியோர் பென்ஷன் உயர்வு உள்ளிட்ட பல திட்டங்களை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தோம். காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்த பல திட்டங்களை தற்போதைய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி நற்பெயர் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.
என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி இடையே பிரச்சினைகள் தொடர்கிறது. அவர்களுக்குள் ஒருமித்த முடிவு கூட எடுக்க முடியாத சூழல் உள்ளது. வருகிற உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தல்களில் நாம் சிறப்பாக பணியாற்றி வெற்றிபெறவேண்டும். கட்சிக்கு உழைப்பவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
இவ்வாறு பேசினார்.