`தினத்தந்தி' செய்தி எதிரொலி: மனநலம் பாதிக்கப்பட்ட பொன்னமராவதி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
காதல் தோல்வியால் 20 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட பொன்னமராவதி தொழிலாளி `தினத்தந்தி' செய்தி எதிரொலியால் மீட்கப்பட்டார்.
பொன்னமராவதி:
காதல் தோல்வி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், மூலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சாயி (வயது 70). இவரது மகன் நாகராஜன் (40). இவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அப்போது கேரளாவை சேர்ந்த பெண்ணுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. பின்னர் காதல் தோல்வியால் மனமுடைந்த நாகராஜன் அன்று முதல் புலம்ப தொடங்கினார்.
தொடர்ந்து சுய சிந்தனையற்ற நிலைக்கு மாறினார். அவரை பல்வேறு மருத்துவமனைகளில் அவரது தாய் மற்றும் அண்ணன் அழைத்து சென்று பார்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறினர். அன்று முதல் மூலங்குடியில் உள்ள தெய்னி கண்மாய் பகுதியில் உள்ள பாறையில் அமர்ந்திருந்தார். அவருக்கு தேவையான உணவுகளை அவரது தாய் மட்டும் கொடுத்து வந்தார். கொட்டும் மழையிலும், வெயிலிலும் அங்கேயே உட்கார்ந்து வந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு
கடந்த 20 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு பாறையில் இருந்து வந்த நாகராஜன் குறித்து `தினத்தந்தி' நாளிதழிலில் நேற்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த செய்தி எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவுபடி, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகன்நாதன் மேற்பார்வையில், பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் உள்ளிட்ட போலீசார் மூலங்குடியில் நாகராஜன் இருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் போலீசார் ஆம்புலன்சை வரவழைத்து அதில் அவரை ஏற்றி பொன்னமராவதியை அடுத்துள்ள வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் நன்றி
அங்கு நாகராஜனை குளிப்பாட்டி, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரை புதுக்கோட்டையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகராஜனுடன், அவரது தாய் நஞ்சாயி உள்ளிட்டோர் உள்ளனர்.
`தினத்தந்தி' செய்தி எதிரொலியினால் நாகராஜனுக்கு மறுவாழ்வு கிடைத்ததை அறிந்த மூலங்குடி, கொப்பனாப்பட்டி, கொன்னையூர் பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.