காட்டுயானை அட்டகாசம்

தேவர்சோலை அருகே மொபட், விவசாய பயிர்களை காட்டுயானை சேதப்படுத்தியது.

Update: 2021-08-08 17:45 GMT
கூடலூர்,

தேவர்சோலை அருகே மொபட், விவசாய பயிர்களை காட்டுயானை சேதப்படுத்தியது.

காட்டுயானையால் நஷ்டம்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், மானிமூலா பகுதியில் பல்வேறு குக்கிராமங்கள் உள்ளது. 
 முதுமலை புலிகள் காப்பக கரையோரம் உள்ளதால் காட்டுயானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. 

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக போஸ்பாரா பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக ஒரு காட்டுயானை, மச்சிக்கொல்லி பகுதியில் இரவில் நுழைந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மொபட் சேதம்

அந்த காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வனத்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மச்சிக்கொல்லி பகுதிக்கு வந்த காட்டுயானை, வீடுகளை முற்றுகையிட்டது. 

இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த குட்டன் என்பவரது மொபட்டை காட்டுயானை தந்தத்தால் குத்தி சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, பாக்கு பயிர்களை தின்று நாசம் செய்தது.

நடவடிக்கை

தொடர்ந்து விடியற்காலை வரை அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை அங்கிருந்து முதுமலை வனத்துக்கு சென்றது. அதன் பின்னரே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
 இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறும்போது, காட்டு யானையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே காட்டு யானை வருகையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்