பஸ் நிலைய பகுதியில் உலா வந்த கரடி

பஸ் நிலைய பகுதியில் உலா வந்த கரடி.

Update: 2021-08-08 17:44 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகாலை 3 மணிக்கு பஸ்நிலையம் பகுதிக்கு வந்த கரடி ஒன்று, அங்கிருந்த பழக்கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. தொடர்ந்து அங்குள்ள பழங்களை தின்று விட்டு, அருகே இருந்த மற்றொரு கடைக்குள் புகுந்தது. அங்கு வைக்கப்பட்டு இருந்த விளக்கில் இருந்த எண்ணெய்யை குடித்து விட்டு சென்றது. பஸ் நிலைய பகுதியில் கரடி உலா வந்த காட்சி, அங்கு காவல்துறையினர் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

பின்னர் மதியம் 2 மணியளவில் அந்த கரடி பஸ்நிலைய பகுதியில் உள்ள புதரில் இருந்து வெளியே வந்து, அங்குள்ள தேநீர் கடை மற்றும் கணினி மையம் அருகே நடமாடியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகளும், கடைகாரர்களும் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மிரண்ட அந்த கரடி, மீண்டும் அருகிலுள்ள புதருக்குள் ஓடி சென்று மறைந்தது.

இதுகுறித்து பஸ் நிலைய பகுதி கடைக்காரர்கள் கூறியதாவது:- கோத்தகிரி பஸ் நிலையத்தையொட்டி மாதா கோவிலுக்கு செல்லும் சாலையோரத்திலும், அதற்கு அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் சாலையோரத்திலும் ஏராளமான புதர் செடிகள் வளர்ந்து உள்ளன. அவை நீண்ட நாட்களாக வெட்டி அகற்றப்படாமல் இருக்கின்றன. எனவே இந்த பகுதியில் கரடிகள் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றன. மேலும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களிலும் சுற்றித்திரிகின்றன. 

இதுபோன்று சுற்றித்திரியும் கரடிகள் பொதுமக்களை தாக்க வாய்ப்பு உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு வனத்துறையினர் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், பேரூராட்சி சார்பில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி  அகற்றி சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்