பழுதான சாலை சீரமைக்கப்படுமா?
மழவன்சேரம்பாடியில் பழுதான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பந்தலூர்,
மழவன்சேரம்பாடியில் பழுதான சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
குண்டும், குழியுமாக...
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மழவன்சேரம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து காவயல் செல்லும் சாலையில் பச்சை தேயிலை ஏற்றி செல்லும் லாரிகள், விவசாய பணிக்கு செல்லும் டிராக்டர்கள், அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து உள்ள சாலையாக விளங்குகிறது.
இந்த நிலையில் மழவன்சேரம்பாடியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து காவயல் வரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
அவதி
தற்போது பந்தலூர் தாலுகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்த சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து, காயமடையும் நிலை காணப்படுகிறது.
மேலும் நான்கு சக்கர வாகனஙகள் சாலையோரம் நடந்து செல்வோர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து செல்கின்றன. இதனால் அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- மழவன்சேரம்பாடி-காவயல் சாலை பழுதடைந்து உள்ளதால் அந்த வழியாக அவசர தேவைக்கு நோயாளிகளை வாகனங்களில் விரைவாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் பச்சை தேயிலையை கொண்டு செல்லும் லாரிகள் பழுதடைந்து நடுவழியில் நிற்கும் நிலை தொடர்கிறது.
நாளுக்குநாள் சாலை மோசமாகி வருவதால், பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். அந்த சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலாவது நடவடிக்கை எடுத்து, சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.