பந்தலூர்,
ஊட்டி நகரில் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பலத்த மழை பெய்தது. பிங்கர்போஸ்ட், தலைகுந்தா, பெர்ன்ஹில், கேத்தி, ஆடாசோலை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் கடுங்குளிர் நிலவியது. இதனால் விடுமுறை நாளான நேற்று பல்வேறு தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மழை காரணமாக சேரங்கிராஸ், மார்க்கெட், பஸ் நிலையம், லவ்டேல் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கி, மழை நிற்கும் வரை காத்திருந்து சென்றதை காண முடிந்தது. பந்தலூர் தாலுகா அம்பலமூலாவில் இருந்து நம்பியார்குன்னு செல்லும் சாலை, ஏற்கனவே பழுதாகி குண்டும், குழியுமாக இருந்தது.
இதனால் இன்டர்லாக் கற்கள் மூலம் சாலை சீரமைக்கப்பட்டு, ஆங்காங்கே தேவையான இடங்களில் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டது. ஆனால் நேற்று பெய்த மழையால் அந்த சாலையில் ஒரு பகுதி இடிந்து சேதம் அடைந்தது. இது சுல்தான்பத்தேரிக்கு செல்ல இணைப்பு சாலை ஆகும். தற்போது அந்த சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சேதம் அடைந்த அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.