திருக்கோவிலூரில் ஏ டி எம் எந்திரத்தில் தவறவிட்டு சென்ற ரூ 9 ஆயிரம் டிரைவரிடம் ஒப்படைப்பு
திருக்கோவிலூரில் ஏ டி எம் எந்திரத்தில் தவறவிட்டு சென்ற ரூ 9 ஆயிரம் டிரைவரிடம் ஒப்படைப்பு ஊழியரின் நேர்மைக்கு போலீசார் பாராட்டு;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள நரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முரளிகுமார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று திருக்கோவிலூர் மசூதி தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது முரளிகுமார் ஏ.டி.எம்.கார்டை எந்திரத்தி் செருகி ரகசிய எணணுடன், தேவையான தொகையையும் குறிப்பிட்டார்.
ஆனால் வெகுநேரமாகியும் பணம் வரவில்லை. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று நினைத்த முரளிகுமார் கார்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று வி்ட்டார். அவர் சென்ற சில நிமிடத்தில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வரும் பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் முருகன் அங்கு பணம் எடுக்க வந்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.9 ஆயிரம் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் யாரோ பணத்தை தவறி விட்டு சென்று இருக்கிறார்கள் என்பதை அறிந்த முருகன் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.9 ஆயிரத்தை எடுத்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த சம்பவத்தை போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பணத்துக்கு சொந்தக்காரர் பஸ் டிரைவர் முரளிக்குமார் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை நேரில் வரவழைத்து ரூ.9 ஆயிரம் பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஒப்படைத்தார். மேலும் இந்த சம்பவத்தில் கால்நடை மருத்துவமனை ஊழியர் முருகனின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.