மாதுளை பழங்களை தாக்கிய பூஞ்சை
திண்டுக்கல் அருகே சாகுபடி செய்யப்பட்டுள்ள மாதுளை பழங்கள் மீது ஒரு வகை பூஞ்சை தாக்குதலுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாதுளை சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாதுளை பழங்கள் ஒரு வகையான பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
இதனால் மாதுளை விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி கபிரியேலிடம் கேட்ட போது, எனது தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் மாதுளை சாகுபடி செய்தேன். தற்போது மாதுளை பழங்கள் நன்கு விளைச்சல் அடைந்துள்ளன. ஆனால் அவை அனைத்தும் பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன.
இந்த பூஞ்சையால் தாக்கப்பட்ட பழங்களில் கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் புள்ளிகள் தோன்றும். இவை பழங்களை தாக்குவது மட்டுமின்றி செடிகள் முழுவதும் பரவுகின்றன. இதனை தடுக்க இயலவில்லை.
பழங்கள் பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளானதால் அவற்றை பறிக்காமல் விட்டுவிட்டோம். சில வாரங்களில் அந்த பழங்கள் தானாக உதிர்ந்து தரையில் விழுந்துவிட்டன. இதனால் எங்களுக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எங்கள் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர் என்றார்.