பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்றால் கடும் நடவடிக்கை

குமரி மாவட்ட வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-07 22:24 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்ட வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வழிபாட்டுக்கு தடை
தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை வருகிற 23-ந் தேதி காலை 6 மணி வரை நீட்டித்துள்ளது. ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் வழிபாட்டு தலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 23-ந் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான நடவடிக்கை
இந்த நாட்களில் நீர்நிலைகளில் மத வழிபாடுகள் நடத்தப்படுவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. தடையை மீறி கூட்டம் கூடுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். ஏற்கனவே சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று வருவது மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோய்த்தொற்று மிகவும் அதிகமாக காணப்படுவதால், எல்லைப்பகுதியில்  உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. 
கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்
கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் பயணிகள் எல்லையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டிருந்தாலோ அல்லது கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் சான்று பெற்றிருந்தாலோ மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்க  சோதனைச் சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
நோய் பரவலை தடுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்