கர்நாடக மந்திரிசபையில் புதிதாக பதவி ஏற்ற 29 மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு
கர்நாடக மந்திரிசபையில் புதிதாக பதவி ஏற்ற 29 மந்திரிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் முறை மந்திரியாக நியமிக்கப்பட்ட சுனில்குமாருக்கு மின்சாரமும், அரகா ஞானேந்திராவுக்கு போலீஸ் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மந்திரிசபையில் புதிதாக பதவி ஏற்ற 29 மந்திரிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் முறை மந்திரியாக நியமிக்கப்பட்ட சுனில்குமாருக்கு மின்சாரமும், அரகா ஞானேந்திராவுக்கு போலீஸ் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
மந்திரி சபை விரிவாக்கம்
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, வயது மூப்பு காரணமாக தனது பதவியை கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, கடந்த 28-ந் தேதி புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 29 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரி சபையில் இடம்பிடித்தவர்களில் பெரும்பாலானோர், எடியூரப்பா தலைமையிலான ஆட்சியில் மந்திரியாக இருந்தவர்கள் ஆவர். மேலும் 7 பேரிடம் இருந்து மட்டுமே பதவி பறிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
மாவட்ட பொறுப்புகள்
மேலும் கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கவும், பல்வேறு மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாலும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், 29 மந்திரிகளுக்கும் உடனடியாக மாவட்ட பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன.
ஆனால் 29 மந்திரிகளுக்கும் உடனடியாக இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து வந்தார்.
இலாகா ஒதுக்கீடு
இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபையில் புதிதாக பதவி ஏற்ற 29 மந்திரிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில் எடியூரப்பாவின் ஆட்சியில் மந்திரிகளாக பதவி வகித்திருந்த பெரும்பாலானவர்களுக்கு, அவர்களிடம் ஏற்கனவே இருந்த அதே இலாகாக்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிதாக பதவி ஏற்றவர்களுக்கும் முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் சில மந்திரிகளுக்கு கூடுதலாக 2 இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
முக்கிய துறைகள்
அதாவது முதல் முறையாக பதவி ஏற்றுள்ள அரகா ஞானேந்திரா, சுனில்குமாருக்கு முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளது. சுனில்குமாருக்கு மின்சாரம் மற்றும் கன்னடம் மற்றும் கலாசார துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது, மின்சார துறையை எந்த மந்திரிக்கும் வழங்காமல் தன்வசம் வைத்திருந்தார்.
தற்போது அந்த துறை சுனில்குமாருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் முதல் தடவையாக மந்திரியாக பதவி ஏற்றுள்ள அரகா ஞானேந்திராவுக்கு போலீஸ் துறை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.
நீர்ப்பாசனத்துறை
இதுதவிர, மூத்த மந்திரிகளான ஆர்.அசோக் (வருவாய்), ஈசுவரப்பா (கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்), சோமண்ணா (வீட்டு வசதித்துறை) உள்ளிட்டோருக்கு ஏற்கனவே அவர்கள் வசம் இருந்த இலாகாக்களே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கோவிந்த் கார்ஜோளுக்கு பொதுப்பணித்துறைக்கு பதிலாக நீர்ப்பாசனமும், ஸ்ரீராமுலுவுக்கு சமூக நலத்துறைக்கு பதிலாக போக்குவரத்துறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் முருகேஷ் நிரானியிடம் இருந்த கனிமவளத் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது.
ஆனந்த்சிங்-எம்.டி.பி.நாகராஜ் அதிருப்தி
இதற்கிடையில், புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்ததில் ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் ஆனந்த் சிங் முன்பு வனத்துறை மந்திரியாக இருந்தார். தற்போது அவருக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மீது அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் தனக்கு தான் விரும்பிய துறையை ஒதுக்க வேண்டும். இல்லையெனில் நான் எம்.எல்.ஏ.வாக இருக்கவே விரும்புகிறேன் என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதுபோல் எம்.டி.பி.நாகராஜ் இதற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறுதொழில் துறைைய நிர்வகித்தார். தற்போதும் அவருக்கு அதே இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், தனக்கு வீட்டு வசதித் துைறயை ஒதுக்கவும் அவர் பசவராஜ் பொம்மையை வலியுறுத்தியுள்ளார்.
4 மந்திரி பதவி இடங்கள் காலி
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபையில் இன்னும் 4 இடங்கள் காலியாக உள்ளன. அந்த 4 இடங்களுக்கும் பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அந்த 4 இடங்களில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் மீதான ஆபாச வீடியோ வழக்கு முடிந்ததும், ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.