பெங்களூருவில் முக்கிய சந்திப்புகளில் 250 போலீஸ் பொம்மைகளை மீண்டும் நிறுத்த முடிவு
பெங்களூருவில் முக்கிய சந்திப்புகளில் 250 போலீஸ் பொம்மைகளை மீண்டும் நிறுத்த முடிவு செய்து உள்ளதாக, போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா கூறியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் முக்கிய சந்திப்புகளில் 250 போலீஸ் பொம்மைகளை மீண்டும் நிறுத்த முடிவு செய்து உள்ளதாக, போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா கூறியுள்ளார்.
வாகன சோதனை
பெங்களூருவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். இதனை தடுக்க நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் வழக்குப்பதிவும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக கடந்த 2019-ம் ஆண்டு பாஸ்கர் ராவ் பணியாற்றினார். அப்போது அவர் போலீஸ் பொம்மைகள் அறிமுகப்படுத்தினார். அதாவது போக்குவரத்து போலீஸ்காரர்கள் அணியும் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிவித்து இந்த போலீஸ் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
போலீஸ் பொம்மைகளை நிறுத்த முடிவு
இந்த போலீஸ் பொம்மைகள் நகரில் முக்கிய சந்திப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தூரத்தில் இருந்து இந்த பொம்மைகளை பார்க்கும் வாகன ஓட்டிகளுக்கு, நிஜமாகவே போக்குவரத்து போலீஸ்காரர்கள் சாலையில் நிற்பது போன்றே தோன்றும். இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருந்து வந்தனர். போக்குவரத்து போலீசாருக்கு இந்த போலீஸ் பொம்மை பெரும் உதவியாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் போலீஸ் பொம்மைகள் முக்கிய சந்திப்புகளில் இருந்து அகற்றப்பட்டு, போலீஸ் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டு பெங்களூரு இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. சாலைகளில் வாகனங்களில் எண்ணிகையும் அதிகரித்து உள்ளது. இதனால் மீண்டும் பெங்களூரு நகரில் முக்கிய சந்திப்புகளில் 250 போலீஸ் பொம்மைகளை நிறுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
1 கோடி வாகனங்கள்
இதுகுறித்து போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா நிருபர்களிடம் கூறும்போது, போலீஸ் பொம்மைகள், போக்குவரத்து போலீசாருக்கு பெரும் உதவியாக இருந்தன. போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறுவதை தடுக்கவும் இந்த போலீஸ் பொம்மைகள் உதவின. கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவில் 34 லட்சத்து 90 ஆயிரம் வாகனங்கள் ஓடின.
ஆனால் இந்த ஆண்டு 1 கோடி வாகனங்கள் சாலையில் ஓடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது அதிகரித்து வருகிறது. இதனால் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போலீஸ் பொம்மைகளை நிறுத்த முடிவு செய்து உள்ளோம். எதிர்காலத்தில் இந்த போலீஸ் பொம்மைகள் நமக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.