குளம் அமைத்து மீன் வளர்க்க மானியம்
குளம் அமைத்து மீன் வளர்க்க மானியம் வழங்கப்பட உள்ளதாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் நெல்லை மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 2021-2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மீன் வளர்ப்பினை விரிவுபடுத்திட மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி அதிகரிக்க மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்திட மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் ஒரு எக்டேரில் ரூ.7 லட்சம் செலவு செய்து மீன் குளம் அமைத்திட 50 சதவீத மானியமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மீன் வளர்ப்பு செய்திடவும் உள்ளீட்டு செலவினங்களுக்கு (மீன் குஞ்சு, மீன் தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு) ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு 40 சதவீத மானியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு தகுதி உடைய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பராமரிக்கப்பட்டு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு சொந்த நிலம் அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். மீன்வளர்ப்பு அல்லது மீன் குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ‘மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 42 சி, 26-வது குறுக்கு தெரு, மகாராஜா நகர், நெல்லை’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 18-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.